திருமாவளவன் காட்டம்
முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை என திருமாவளவன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் அரசியலை நீர்த்து போக செய்வதற்கு சனாதன சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். பெரியார் ஒரு அரசியல் கட்சிக்கோ, இயக்கத்திற்கோ சொந்தமானவர் அல்ல. ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கு சொந்தமானவர்” என்று கூறினார்.
சட்டத்தை மதிப்பதில்லை
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதேச்சதிகரமாக செயல்பட்டு வருகிறது. எதிர் கட்சிகளையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதை உன்னிப்பாக கவனித்து வரும் மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் கூறினார்.
வாக்குச் சீட்டு முறை
நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களில் வரும் 29ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மழை வெள்ளம் காரணமாக விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை ஜனவரி இறுதி வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளோம் என்றார்.
ஊழல் குறித்து பாஜக பேசலாமா
பொன்முடி வழக்கை சட்டப்படி எதிர்கொள்வதற்கு திமுக வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர் அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி உள்ளார். சட்டப்படி உரிய தீர்ப்பை அவர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதையே இல்லை. சிஏஜி அறிக்கை மூலம் மெகா ஊழல் வெளியாகியுள்ளது. ஊழல் ஆட்சியாக ஒன்றிய அரசு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மத்திய அரசைப் பொறுத்த வரை ஆண்டு தோறும் வழக்கமாக தரக்கூடிய நிதியைத்தான் 2 தவணைகளாக 900 கோடியை விடுவித்துள்ளனர். ஆனால், நிவாரணத்திற்காக கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. ஆண்டு தோறும் வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு தாங்கள் தான் கரிசனம் உள்ளவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவது போன்ற தொனியை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார் என்று திருமாவளவன் காட்டமாக குற்றம் சாட்டினார்.