தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள்
உலக வரலாற்றில் புத்தர், சாக்ரடீஸ், பெரியார் ஆகியோர் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும், மூவரும் தனிச் சிறப்பு வாய்ந்த பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆவர்.
எதையும் ஏன் என்று கேள் !
உன் பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து அறிந்து
முடிவு செய் ! மனிதருக்குள்
ஏற்ற தாழ்வை ஏற்காதே !
கடவுளை மற ; மனிதனை நினை !
போன்ற முழக்கங்களை
முன்னிறுத்தி, பன்னூறு ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்றிட, 80 ஆண்டு காலம் பொதுவாழ்வில் போராடிய போராளி ! தந்தை பெரியார் அவர்கள், 1924 – 1925 ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் ஈ.வெ.ரா இருந்தபோது, ஒரு நாள் ஏ.டி. பன்னீர் செல்வம், உமாமகேஸ்வரன் பிள்ளை ஆகியோர்” தமிழ் நாட்டில் ஏற்ற தாழ்வு அதிகம் இருக்கிறது ” என்று காந்தி அடிகளிடம் சொல்லிட, அதற்கு காந்தி அடிகள் அவர்கள் நான் முன்பு சென்னை வந்தால் மைலாப்பூர் சீனிவாச அய்யங்கார வீட்டுக்குத்தான் செல்வேன். அவர் என்னை வீட்டுத் திண்ணையில் வைத்து உணவு பரிமாறுவார். ஆனால் இப்போதெல்லாம் சென்னைக்கு வந்தால் நானும், மனைவி கஸ்தூரி பாயும் சீனிவாச அய்யங்கார், வீட்டு சமையல் அறைக்கே சென்று உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்றால் அதற்குக் காரணம் ஈரோடு இராமசாமி (நாயக்கரின்) தொண்டுதான் காரணம் என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னதை, இராஜாஜி அவர்கள் ” தமிழ் நாட்டில் காந்தி ” என்ற நூலில் எழுதியுள்ளார்.
” வைக்கம் வீரர் பெரியார், வைக்கம் போராட்ட வெற்றி, விழாக் கூட்டம் வைக்கத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தென்றல் திரு.வி.க தந்தை பெரியார் அவர்களுக்கு ” வைக்கம் வீரர் பெரியார் ” என்ற பட்டத்தினை வழங்கினார்கள்.
1934 ஆம் ஆண்டு மனைவியை இழந்த சிதம்பரம் என்பவருக்கும், கணவனை இழந்த ரெங்கம்மாள் என்பவருக்கும் (புரட்சிகரமான) “‘சுயமரியாதை திருமணத்தை. ” தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்தினார்கள்.
( சிதம்பரத்திற்கும்- ரெங்கம்மாளுக்கும் பிறந்த மகள் மோகனா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தமிழர் தளபதி கி.வீரமணி மனைவி என்பது குறிப்பிடத் தக்கது)
1953 ஆண்டு நீதிமன்றம் சுயமரியாதை திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதனால் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சர் ஆனதும் 1967 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ” நடைபெற்ற – நடைபெறும் ” ” சுயமரியாதை திருமணம் ” அனைத்தும் செல்லுபடியாகும் வகையில் சட்ட முன் வடிவை நிறைவேற்றினார்கள்.
தந்தை பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் கோரிக்கையினை ஏற்று வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப சமூக நீதிக் காவலர் தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் 2.10.1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ” அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ” ஆகும் சட்ட முன்வடிவை நிறைவேற்றினார்கள். 1929 ஆண்டு செங்கற்பட்டில் தந்தை பெரியார் முன்னிலையில் பி.ஏ. சௌந்தி பாண்டியனார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும்.
1989 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் சொத்த்தில் சமஉரிமை சட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றினார். திராவிடர் கழகத் தலைவர் பெரியார், சுமார் 80 ஆண்டு காலம் (கடைசி காலத்தில்) மூத்திரச் சட்டியை கையிலேந்தி) தமிழ்நாடு முழுதும் ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைத்திட – மனிதன் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதற்கு இறுதி மூச்சு வரை உழைத்திட்ட
தந்தை பெரியார் அஞ்சா சிங்கம் ! அறிவின் களஞ்சியம் ! மூத்த ஞானி ! மூடத்தின் வைரி ! சிந்தனைச் சிற்பி! சீர்சால் மேதை ! வைக்கம் வீரர்! ஞாலம் போற்றும் சீலத் தலைவன் ! பகுத்தறிவுப் பகலவன் ! தன்மானத் தங்கத் தூண் ! தொண்டு செய்து பழுத்த பழம் ! தூய தாடி மார்பில் மார்பில் விழும் ! மண்டை சுரப்பை உலகு தொழும் ! மனக்குயில் சிறுத்தை எழும் ! அவர் தாம் பெரியார் தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமும் சுயமரியாதை சுடர்ஒளி தந்தை பெரியாரின் பகுத்தறவுக் கருத்துக்களை பரப்பிட இந்நாளில் உறுதிஏற்போம்!
தந்தை பெரியாரின் புகழ் இமயம் போல் உயர்ந்து நிற்கும் !
க.வை.இராமகிருட்டினன்.
செயலர்
அய்யன் திருவள்ளுவர்
இலக்கிய மன்றம்
மதுரை