முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூ. 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்!
மாற்றத்தை நோக்கி
வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. முடி திருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக தன் கடைக்குள் சிறிய நூலகத்தை தூத்துக்குடி மில்லர்புரத்தில் ‘சுசில்குமார் பியூட்டி கேர்’ என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன் வைத்துள்ளார். முடிதிருத்தும் கடை என்பதைவிட மூளையை புதுப்பிக்கும் கடை என்று தாராளமாகச் சொல்லலாம். முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் வழக்கமாக செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது.
பொன் மாரியப்பன் கடைக்கு நாளிதழ்கள், வார இதழ்களும் வருகின்ற நிலையில் நாவல், கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம் என சுமார் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது.
400 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
8 ஆம் வகுப்பு வரைக்குமே படித்திருக்கும் மாரியப்பனுக்கு சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் உண்டு. சில ஆண்டுகள் ஒரு வழக்கறிஞரிடம் சிப்பந்தியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அப்பா செய்து வந்த முடி திருத்தும் தொழிலைத் தொடர கடை ஆரம்பித்தார். முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 400க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது.
கடையைத் துவங்கி 7 வருடங்கள் ஆகிறது. “புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரிசையா அடுக்கி வைத்தேன். முடிவெட்ட காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம் காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமாகப் புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்பேசியில் மூழ்கிக் கிடக்கக்கூடாது, அடிக்கடி செல்பேசி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள். குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவரின் பார்வையில் படுறமாதிரி ஒட்டி வச்சிருக்கேன்”என்கிறார் பொன் மாரியப்பன்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரையில் இவருக்கு ’புத்தகர் விருது’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி தூத்துக்குடியில் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார். இப்போது கடைக்கு முடிவெட்ட வருகிறவர்கள் யாரும் செல்பேசிப் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போகிறவர்களும் நிறைய உண்டு.
முடி திருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டு செல்லும் போதும், இந்த 6 ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட கட்டணத்தை உயர்த்தியதில்லை மாரியப்பன். இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் வற்புறுத்திய போதிலும், ரூ.50 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.80 உயர்த்தி அறிவித்திருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு.
“கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா ரூ.30 குறைப்புன்னு சொல்றது எப்படிப் பார்த்தாலும் அதே ரூ.50 கட்டணம் தானே உனக்கு கிடைக்குது” என்று மாரியப்பனிடம் மற்ற கடைக்காரர்கள் இப்போது கேட்கிறார்கள்.
“மத்த கடைக்காரர்களுக்காக கட்டணத்தைக் கூட்டினேன். இதில் எனக்கு உடன் பாடில்லை. அதனால், புத்தகத்தை வாசிக்கச் சொல்லி குறைச்சிட்டேன். இதுல எனக்கு ஒரு மன நிறைவு” மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பொன். மாரியப்பன். புத்தக வாசிப்பே அருகி வரும் இந்தக் காலத்தில் பொன் மாரியப்பனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதே! முடி குறையட்டும்; அறிவு வளரட்டும்!