கடும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றியங்களில் உள்ள 14 கிராமத்தில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.
ஏரல் பகுதியில் பாலம் உடைப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ள இடத்தில், தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை மீண்டும் ஆய்வு செய்தார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் எ.வ.வேலு பேசியதாவது
தொடர்ந்து 5 தினங்களாகத் தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தால் பெரும்பான்மையான விவசாய பெருங்குடி மக்களின் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது.
மழையினால், கிராமத்திற்குச் செல்கின்ற சாலைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, பழுதடைந்து உள்ளதால் சில பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு துறைச் செயலாளர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

தற்போது சாலைப் பணிகளை தற்காலிகமாக சீர் செய்கின்ற பணிகள், நிரந்தரமாக சீர் செய்ய வேண்டியப் பணிகள் என 2 பிரிவுகளாகப் பிரித்து பணிகள் மேற்கொண்டு வருகின்றோம். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 98 இடங்களில் சாலைகள் பழுதடைந்து இருந்தது. தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 33 இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏறத்தாழ 20 இடங்களில் சாலைப் பணிகள் விரைவில் முடிவடையும்.ஏரல் பகுதிக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து போக்குவரத்து தொடங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திரா நகர், திருப்புலியங்குடி, போப்படையூர், பேரின்பபுரம், ஆயத்துறை, குலசேகரநத்தம், பராக்ரமப் பாளையம், பேரூர், சாயல்புரம், குருவப்புரம், இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், தோளப்பப்பண்ணை, பேய் குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் போக முடியாத நிலை இருந்தது. தற்போது இந்த சாலைகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக கூறினார்.