தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களை அந்தியோஜனா, அன்னயோஜனா திட்டத்தில் இணைத்திட வேண்டும்.
3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்திட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை பேட்டரி வாகனம் இயக்கிட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளை அலட்சிய போக்குடன் நடத்துகின்ற மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் உள்ள பெண் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குறைதீர்வு கூட்டத்தின் போது பெயரளவில் மட்டுமே மனுக்கள் பெறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், காவல் துணைகண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பேச்சு வர்த்தை நடத்தினர்.
தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.