இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லியில் 2 ஆண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை, மத்திய விளையாட்டு அமைச்சகம் கலைத்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையிலான கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது. மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 12ல் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 11ல் தேர்தல் நடத்த பஞ்சாப் – அரியானா ஐகோர்ட் தடை விதித்தது.
இந்த தடையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பிற்கு டிசம்பர் 21ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு, காமன் வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற அனிதா ஷெரோன், உ.பி. மாநில மல்யுத்த சங்க துணைத்தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் சஞ்சய்சிங், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சிங்குக்கு உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பின் நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் சஞ்சய் சிங் 40 – 7 என்ற ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், அவரது ஆதரவாளர்களே, துணைத்தலைவர், பொதுச்செயலர் உட்பட மல்யுத்த கூட்டமைப்பின் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.
சாக்சி கூறுகையில்,
‘மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக ஒரு பெண் தேர்வு பெற வேண்டும் என விரும்பினோம். ஆனால், பிரிஜ் பூஷனின் உதவியாளரைதான் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுகிறேன்’ என்றார்.