வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது.
வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி வருங்கால வைப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்துகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் 27 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சியை நடத்த ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறை தீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும்.
‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு ஓட்டேரி செவன்த்டே அட்வென் டிஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரணி எய்ம் மெட்ரிகுலேசன் பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சரஸ்வதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை, திருப்பதூர் மாவட்டத்திற்கு ஆம்பூர் இ.எஸ்.ஐ. கார்ப்பஷன் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இதில் வருங்கால உறுப்பினர், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.