ஒரு டிஎம்சி என்றால் எவ்வளவு நீர்…
மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி (tmc) என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம் காவிரியில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளார்கள், அணையில் இருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்படுகிறது… குடிநீருக்காக இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பது குறித்தும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம்…
ஆனால், டிஎம்சி என்றால் என்ன…
ஒரு டிஎம்சி என்பது எத்தனை லிட்டர் தண்ணீர் என்பது பாமரர்கள் உள்பட படித்த மேதாவிகள் வரை பலருக்கு தெரியாத நிலையே இன்றளவும் நீடித்து வருகிறது. டிஎம்சி (TMC) என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுறுக்கமாகும் (Thousand million cubic). அதாவது ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். இதைத்தான் சுருக்கமாக டிஎம்சி என்று கூறி வருகிறோம். கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். அப்படியானால் 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர்.
ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க வேண்டுமென்றால் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். அதுபோல ஒரு டி.எம்.சி தண்ணீரை 1லிட்டர் பாட்டிலில் போட்டு ரூ .20 என்று விற்பனை செய்தால், ஏறக்குறைய ரூ. 56 கோடிக்கு விற்பனை செய்யலாம். அப்படியானால்…. கற்பனை செய்து பாருங்கள் மக்களே…. மலைக்க வைக்கிறதா?
விநாடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்குக் குடிநீர் வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் நீளம் கொண்டது. இந்த அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. காவிரியில் உள்ள வேறு அணைகளான ஹேமாவதி, ஹாரங்கி இரண்டும் நிரம்பினால் அந்த நீர் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் வந்து அதன் மூலமே தமிழகத்திற்கு வரும்.
இதில், கபினி அணை 15.67 டிஎம்சியும், ஹேமாவதி 35.76 டிஎம்சியும், ஹாரங்கி அணை 8.07 டிஎம்சியும் கொள்ளளவு கொண்டது. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05 டிஎம்சி தண்ணீர். ஆக மொத்தம் கர்நாடகாவில் காவிரி பாசன அணைகளில் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கர்நாடகாவில் திறந்து விடப்படும் காவிரி நீர் முழுவதையும் தாங்கி நிற்கும் அணையாக மேட்டூர் உள்ளது.

தற்போதைய மழைக்காலங்களில் நாம் எவ்வளவு டிஎம்சி தண்ணீரை வீணாக்கி வருகிறோம்… எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது… இதுகுறித்து நாம் என்றைக்காவது சிந்தித்தோமோ? சித்தித்தால் தலைச்சுற்றி விடும் என்பதே உண்மை…
ஆண்டுக்கு 100 tmc முதல் 400 tmc மழைநீர் கடலில் கலக்கிறது.
இனிமேலாவது மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நாம் முயற்சி மேற்கொள்வோம்… மழை நீர் சேகரிப்பை அமல்படுத்துவோம் மீண்டும் குடிநீர் பற்றாக்குறையின் போது தண்ணீர்… தண்ணீர் என்று அல்லாடுவதை தவிர்ப்போம்…. அரசை குறை கூறுவதை தவிர்த்து, நாமே களத்தில் இறங்கி எதிர்காலத்தை வளமாக மாற்றுவோம்…