ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்ட திமுக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தீவிர கவனம் செலுத்தும் வகையில் 5 மாவட்டங்களில் நிர்வாக மாற்றங்களை செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும் 2026ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றனர். முதற்கட்டமாக புதிதாய் கூட்டணி அமைப்பது, ஏற்கனவே இருக்கும் கூட்டணியை தக்கவைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் நடந்துவருகின்றன.
அந்த அடிப்படையில், கூட்டணியில் இருந்து பிரிந்த பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இது ஒரு பக்கம் அரசியல் கணக்கு குறித்தான பல்வேறு கோணங்களில் பேச்சுகள் எழுந்துவரும் வேளையில், தங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி என்று திமுக தலைமையிலான கூட்டணி குறித்தான பேச்சுகள் எழுந்துவருகிறது.
கூட்டணி, கணக்கு என ஒருபக்கம் அரசியல் கட்சிகள் இயங்கிவரும் வேளையில், மறுபக்கம் தங்கள் கட்சியின் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்திவருகின்றன. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணியை துரிதப்படுத்தும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கிருஷ்ணகிரி, சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவில் நிர்வாக ரீதியாக ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வேலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களும், கிருஷ்ணகிரியில் இரண்டு ஒன்றியங்களும் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.