2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.
அ.தி.மு.க.,- பா,ஜ.க., கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதுமே.. அமித்ஷா 2026ல் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தார். கூட்டணி அமைந்த பின்னர் சென்னையில் நடந்த மீட்டிங்கிலும் கூட்டணி ஆட்சி என்றே அறிவித்தார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைய தன் கட்சித்தலைமையையே மாற்றியது பா.ஜ.க.,. வலுவான ஒரு தலைமையை மாற்றி விட்டு, சாதாரண தலைமையை உருவாக்கி, அதிமுக., கேட்டதெல்லாம் செய்து தருகிறது.
இந்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே இல்லை. இதனால் தான் எடப்பாடியும், அமித்ஷாவும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்துள்ளார். கூட்டணியில் உறுதி தான். ஆனால் தனித்து ஆட்சி என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார்.
இதனால் பா.ஜ.க.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டே… தனி அரசியல் ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். தனித்து ஆட்சி அமைக்க தேவையான திட்டங்களை வகுத்து வருகிறார். அதாவது வரும் சட்டசபை தேர்தலில் 180க்கும் அதிகமான இடங்களில் தனித்து போட்டியிட எடப்பாடி திட்டமிட்டு உள்ளார். அப்போது தான் 118 இடங்களை வெல்ல வாய்ப்புகள் வரும். 60 இடங்களில் தோற்றால் கூட.. 120 இடங்களை வெல்ல முடியும் என்று எடப்பாடி நினைப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 2026ல் தனியாக ஆட்சி அமைக்க முடியும். மீதம் உள்ள 54 இடங்களை அப்படியே பாஜகவிற்கு தரலாம். பாஜக அதை யாருக்கு பகிர வேண்டுமோ பகிரட்டும். ஓ.பி.எஸ்., சசிகலா., டிடிவி என யாருக்கு வேண்டுமானாலும் தரட்டும் என்ற நிலைப்பாட்டை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் பாஜகவிற்கு கணிசமான இடங்களும் கிடைக்கும்.. எடப்பாடியும் வென்றால் அதிமுக சார்பாக தனியாக ஆட்சி அமைக்க முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார்.
இதற்காக மேலும் பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உத்தரவிட்டுள்ளார். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேயை எடுக்க உள்ளார். அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது.
பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன. எத்தனை வாக்குகள் வெளியே செல்கின்றன. முதலமைச்சர் முகங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. விஜயால் அதிமுகவிற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? திமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளதா சரிந்து உள்ளதா?
ஆட்சிக்கு ஆதரவான எதிரான மனநிலைகள் உள்ளதா? அதிமுக எந்தெந்த மண்டலங்களில் வலுவாக உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் வலிமை இன்றி உள்ளது என்று பல விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சர்வே மூலம் அறிய உள்ளார். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் எடப்பாடி ஒப்பந்தம் செய்ய உள்ளார்.
பா.ஜ.க.,வும் எடப்பாடியின் நிகழ்வுகளை கூர்மையாக கவனித்து வருகிறது. இப்போதைய நிலையில் பா.ஜ.க.,வை பொறுத்தவரை முதலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க., பெரிய அளவில் சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இந்த இரண்டும் செய்து முடித்த பின்னர்.. கூட்டணி ஆட்சி குறித்து முடிவெடுக்கலாம் என பா.ஜ.க.,வும் அமைதி காத்து வருகிறது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
-மா.பாண்டியராஜ்