தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் நலன்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
1. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அரசு நிதி நிலை அறிக்கையின் மீது ஏற்பட்ட பெரும்சுமை காரணமாக அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்வதற்கான நடைமுறை 01.04.2026 முதல் 15 நாட்கள் சரண் செய்து பணப்பலன் பெரும் வகையில் மீண்டும் செயல்படுத்திட கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த நடைமுறையை இந்த ஆண்டு செயல்படுத்திட கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை 01.10.2025 வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3561 கோடியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
2. 01.01.2025 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு 2சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.1252 கோடி செலவிடப்படும்.
3. அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
4. அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிக்க ரூ.50,000 உயர்த்தி வழங்கப்படும்.
5. அரசு ஊழியர்களுக்குத் திருமண முன்பணம் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
6. பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ. 500 ரூபாயிலிருந்து ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.
7. ஓய்வூதியதாரர்கள் பண்டிகை கால முன்பணம் ரூ.4000 ரூபாயிலிருந்து ரூ.6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
8. பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஆராய குழு அமைக்கப்படும். இந்த குழு அதன் பரிந்துரைகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.
9. திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் ஒரு ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தையும், தகுதிக்கான பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் அவர்களின் பணி உயர்வு ஆகியவை பாதிக்கப்படாது.
காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அவர் கூறும்போது,
காவலர் நலன் காக்கும் அரசு
“தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.
காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.