தற்போதைய சூழலில் நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஜோதிடத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். நாமும் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை நகைச்சுவையாக ஜோதிடம் மூலமாக பார்க்கலாம், வாங்க.
ஜோதிட சாஸ்திர நுால்களின் கணக்குப்படி சனிப்பெயர்ச்சி நடந்து முடிந்து விட்டது. அடுத்து சில நாட்களில் ராகு, கேது பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் நடக்க உள்ளன. இந்த நான்கு கிரகங்களின் பெயர்ச்சிப்படி எந்தெந்த ராசிக்கு, எந்தெந்த நட்சத்திரத்திற்கு என்னென்ன பலன்கள் என ஜோதிடர்கள் விரிவாக கூறி வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் இந்த ஜோதிடங்கள் குறித்த வீடியோக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழக அரசியல்கட்சிகளுக்கு எந்த மாதிரி பலன்கள் இருக்கும் என்பதை ஜோதிட பாணியில் யூகமாக நாம் பார்க்கலாம். இது சும்மா… காமெடிக்குத் தான்… நிஜம் என யாரும் நம்பி விட வேண்டாம்.
திமுக:
திமுகவுக்கு சனி பார்வை மிகவும் பலமாகவே இருக்கு. இதனால் பழைய வழக்குகள் உயிர்பெறலாம். அதேபோல ரத்தான வழக்குகள் கூட வரிசையாக புத்துயிர் பெறும். சனியின் தீவிர பார்வை அமைச்சர்கள் மீது இருக்கிறது. இதனால் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்குவார்கள்.
சிலரது பதவி கூட பறிபோகும். அதனால் தலைமை கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இப்போதும் முடிவு எடுப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. சனியின் ‘மத்திய’ பார்வையும் விழுவதால் கூடுதல் கவனம் எடுப்பது நல்லது. பொதுவாக இப்போதைய சூழலில் மோதல் போக்கினை கை விட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும், சிக்கல்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக நல்லது.
அதிமுக:
அதிமுகவுக்கு இப்போது ‘ஷா’ எழுத்து ராசியானது. குருவின் நேரடி பார்வை கிடைத்துள்ளது. அதனால் பல பழைய வழக்குகள் ரத்தாகும் வாய்ப்புகள் உள்ளன. சில வழக்குகள் விலகிச் செல்லும். சில வழக்குகளில் வெற்றியும் கிட்டும். புது ரத்தம் பாய்ச்சியது போல ரத்தத்தின் ரத்தங்கள் பணியாற்ற அடிக்கடி விருந்து வைக்க வேண்டிய நிர்பந்தம் தேவைப்படும்.
மனசுக்குள் சஞ்சலங்கள் இருந்தாலும் ‘ஷா’ வை நினைத்தால் அனைத்தும் பறந்து போகும். பழைய மோசமான சூழ்நிலைகள் மாறும். எதிரிகள் பலம் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது. சூழ்நிலையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்து எதிர்காலம் அமையும். அதாவது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும்.
பாமக:
குடும்பத்தில் சண்டைகள் அதிகரிக்கும். குறிப்பாக சனி அமர்ந்திருக்கும் இடம் சரியில்லை. இதனால் அப்பா மகனுக்கு இடையே கலகம் வெடிக்கும். வெளிப்பார்வைக்கு நட்பாகத்தோன்றினாலும் உள்ளுக்குள் பகை வெடித்து நிற்கிறது. கூட்டணிக்காக பல கதவுகள் திறந்து இருந்தும் வாரிசு பிரச்னையால் எங்கே தோள் கொடுப்பது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கிறது.
மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதா..அல்லது வெட்டி பங்குபோட்டு சாப்பிடுவதா என்பது அப்பா மகனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மாம்பழம் மரத்தில் இருந்து விழுந்து விட்டால் சிறுத்தைகள் கூட சாப்பிடும். இப்போது உள்ள சிறுத்தைகள் மாம்பழத்தை சாப்பிடும் குணம் கொண்டவை. கூட்டணிக்கு பல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டணி தேர்வில் கவனமாக இருந்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
விசிக:
வாயால் துன்பங்களை சந்திக்கும் வாய்ப்புகள் மிக, மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக மிக, மிக சென்சிட்டிவ் ஆன விஷயங்களில் ஒரு சார்பு இல்லாமல் பேச வேண்டும். சார்புகள் நிறைந்த பேச்சு சிக்கலை தரும் வாய்ப்புகள் உள்ளது. சமீபகாலமாக மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டுள்ளன. சனியின் பார்வை விலகுவதால் குருவின் “ஆட்சி” வருகிறது.
அதனால் ஆட்சியில் பங்கு எனும் சஞ்சலம் மனதில் நிழலாடுகிறது. உடன்பிறப்புகள் தரும் தினசரி தொல்லைகளால் தலைமையின் மனசு ரொம்பவும் சின்னப்பிள்ளை போல அடம்பிடித்து அழுது கிடக்கிறது. ஆனாலும் எங்காவது புது சேர்மானம் கிடைக்குமா என்ற நப்பாசையும் மண்ணுளி பாம்பாக படுத்துக் கிடக்கிறது.
கட்சியினரால் நாளுக்கு நாள் தொல்லைகளும், கெட்ட பெயரும் அதிகரிக்கும். கவனமாக கடக்க வேண்டிய நேரம். யாருடன் சேருவது என்பதில் தெளிவு இருந்தால், அதிகாரம் கூட கை வந்து சேரும்.
காங்கிரஸ்:
சூனிய நிலையில் இருந்தும் வீம்பு பேசுவதில் அவர்களுக்கு இணை யாரும் இல்லை. பூஜ்யத்துக்குள் ஒரு ராஜ்ஜியம் தேடுவதில் இவர்கள் படுகில்லாடிகள். தேசம் பேசிய பெரிய குடும்பம் இன்று குடும்பத்து பிரச்னைகளால் அதை தீர்க்க முடியாமல் தவித்து கிடக்கிறது. எங்கே நமக்கும் ஒரு நல்ல காலம் பொறக்காதான்னு காத்து..காத்து..காத்து.. வயசுதான் ஆகிடிச்சி..புது ரத்தம் பாய்ச்சாட்டி சுவடு தெரியாம போய்டும் அந்த தேசிய குடும்பம்.
தவிர குடும்பத்தினரிடையே ஒருமித்த செயல்பாடுகள் மிக, மிக முக்கியம். அரசியல் குடும்ப வாரிகளுக்கு தற்போதைய கள அரசியல் குறித்து போதிய அளவு ஞானம் இல்லை. இதனால் மக்கள் தொடர்பையும், அரசியல் ஞானத்தையும் வளர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
தவெக:
கட்சி தலைமைக்கு தொடக்கத்தில் இருந்தே சேர்மானம் சரியில்லை. கூட்டாளிகள் பேசியும் கெடுப்பார்கள். பேசத்தெரியாமலும் கெடுப்பார்கள். எழுதி வைப்பதை கூட வாசிக்க தெரியாமல் தடுமாறுவார்கள். குருவின் பார்வை இருந்தாலும் கூட கேதுவின் பார்வை மிக,மிக வலுவாக எதையோ தடுக்குது. நல்ல ஆலோசனை வழங்க கூட்டாளிகள் இல்லை. சிறப்பான ஆலோசகர்கள் வைத்தாலும், கூட்டணி வைத்தாலும், புது ரத்தம் பாய்ஞ்சாலும் சாதனைக்கு இடமில்லை.
இன்னும் நீண்ட பாடம் கத்துக்கணும். அறிக்கைகள் கூட அஞ்சாப்பு படிக்கிற பசங்க சொன்னதுபோல இருக்குது. தலைமை சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை புரிஞ்சுக்கனும். சினிமா பார்ப்பவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்பதை மறந்து கவனமாக செயல்படனும். மாத்தணும்.. மாத்தணும்.. எல்லாத்தையும் மாத்தணும்.
ஓபிஎஸ்:
தனக்குத்தானே நாமம் போட்டுக்கொண்ட அப்பாவி. கொட்டாவி விடுற நேரத்தில கொண்டையில் இருந்த கிரீடத்தை பறிகொடுத்த சாதாரண தொண்டன். அம்மா அம்மா..என்று அழுது தவித்தபோதும், யாரும் கண்டுகொள்ளப்படாத ஏமாளி. பொழைக்கத் தெரியாத மூத்தப்பிள்ளை. எங்கே செல்லும் இந்த பாதை… என கோயில் கோயிலாக செல்கிறார். சற்று அமைதியாக செயல்பட்டு, ‘ஷா’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொல்லி வந்தால், ஜெயம் கிட்டும் வாய்ப்புகள் கிடைக்கும்.
திரும்பவும் சொல்றோம். இது இப்போதைய அரசியல் சூழலை கணக்கில் வைத்து எழுதப்பட்ட நகைச்சுவை ஜோதிடம். நாளாக, நாளாக கிரகங்கள் மாறும். இதனால் சூழல்கள் மாறும். அப்போதைய சூழலுக்கு ஏற்ப அரசியல் ஜோதிடத்தை நாம் மீண்டும் கணித்து எழுதலாம். “அரசியல் ஜோதிடாய நமஹ..!’
-மா.பாண்டியராஜ்