கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். பா.ம.க., தலைவர் மணி பேசுகையில்,
”காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அகில இந்திய அளவில் நேரு, இந்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை. அதனால் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்,” என்று கோரினார்.
இதையடுத்து கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து அவர் சட்டசபையில் பேசுகையில், ”தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கல்வித் துறையில் உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் கருணாநிதி.
கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ள அவர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்து, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கியவர், கருணாநிதி. அவரது பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்