பக்கத்து மாநிலங்களி்ல் எல்லாம் கூட்டாட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சி… அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தயக்கம் என காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை நிர்வாகிகள் வெளுத்தெடுத்து விட்டனர்.
தமிழக காங்., செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது. மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் கோடங்கர், சூரஜ்ஹெக்டே, தமிழக காங்., முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, அழகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், காங்., சட்டசபை குழு முன்னாள் தலைவருமான கே.ஆர்.,ராமசாமி பேசியதாவது:
சென்னையில் சில நாட்களுக்கு முன்னர், தமிழக காங்., கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். துணை முதல்வர் பதவியும், சில அமைச்சர்கள் பதவியும் தர வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அப்படி போஸ்டர் ஒட்டிய நபரிடம் விளக்கம் கேட்டு நீங்கள் (செல்வப்பெருந்தகை) நோட்டீஸ் அனுப்பியிருந்தீர்கள். ஏன் அப்படி நோட்டீஸ் அனுப்பினீர்கள். அப்படி ஒரு போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு?
பக்கத்து மாநிலம் உட்பட பல மாநிலங்களில் காங்., ஆட்சி, அதிகாரத்தில் பங்குடன் தானே ஆட்சி செய்கிறது. உங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்றால் எனக்குத் தாருங்கள். நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நேத்து கட்சி ஆரம்பிச்சி நடிகர்கள் கூட, தனக்கு முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி வேணும், ஆட்சி, அதிகாரத்தில சம பங்கு வேண்டும்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க… நாம் நுாற்றாண்டை கடந்த கட்சி. நாம கேட்டா என்ன தப்பு?
இப்படி ஒரு உரிமையினை கேட்ட நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் நாளை கட்சியில் யார் பணிபுரிவார்கள். நீங்களே கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தால் எப்படி என வறுத்தெடுத்து விட்டார்.
இதனை கேட்ட மேலிட பொறுப்பாளர்கள், ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை. இதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தான் தவறு. எந்த விவகாரமாக இருந்தாலும் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் பேசி சரி செய்கிறோம் என்றனர்.
முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ‘தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் காங்., கட்சிக்கு தலைவர்கள் இல்லை. தலைவர்கள் நியமிக்க முடியாத அளவுக்கு நாம் இருக்கிறோம். இதன் மூலம் இப்போதே நம்மிடம் 30 எம்.எல்.ஏ., தொகுதிகளில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. இந்த பிரச்னையை எப்போது சரி செய்யப்போகிறீர்கள் என்றார்.
இதைக் கேட்ட மேலிட பொறுப்பாளர்கள், ‘எந்தெந்த பதவிக்கு, எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் தேவை என்ற பட்டியலைத் தாருங்கள். தகுதியான நபர்களை பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் நியமனம் செய்கிறோம்’ என்றனர்.
முன்னாள் தலைவர் அழகிரி பேசும் போது, நான் தலைவராக இருந்த போது அத்தனை பூத்களுக்கும் பூத் கமிட்டி போட்டேன். இப்போது அதன் நிலை தெரியவில்லை. இந்த நிலையில் கிராம கமிட்டி போடுவதும் மிகவும் முக்கியம் என்றார். இப்படி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவி்த்தனர்.
ஏற்கனவே திருமாவளன், ‘நான் கூட்டணியில் எந்த ஒரு வலுவான முடிவையும் எடுக்கும் அளவுக்கு வலுவான தலைவர் தான். எங்களை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. தி.மு.க., கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதில் தான் எதிர்க்கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்’ என தொடர்ந்து பேசி வருகிறார்.
இதன் மூலம் தி.மு.க., கூட்டணிக்கு பலமே நாங்கள் தான். நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை மறைமுகமாக கூறி வருகிறார். இதன் மூலம் சில கோரிக்கைகளை வைக்க அவரும் தயாராகி வருகிறார்.
இப்படி ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கையில் காங்., கட்சியில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக வெடித்துள்ள ஆட்சி, அதிகார பிரச்னை பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை, ‘நாம் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து, அவர்கள் வழிகாட்டுதல்கள்படி முடிவு செய்வோம்’ எனக்கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால், திருமாவளவன் கட்சியில் ஒரு சில பிரச்னைகள் இருந்தாலும் அவர்களுக்கு என்று கட்டுக்கோப்பான வாக்குகள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலை அப்படி இல்லை என்பதை அறிந்துதான் செல்வப்பெருந்தகை அதை எதிர்த்தார் என்பதும் கட்சியினருக்குத் தெரியாமல் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டம்தோறும் வலிமையான தலைவர்கள் இல்லை.
களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு தொண்டர்கள் இல்லை. ஏதாவது ஒரு திராவிடக்கட்சியின் தோளில் சவாரி செய்தால்மட்டுமே அவர்களால் வெற்றிபெற முடியும். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உட்கட்சிப் பூசல்போல வேறு எந்த கட்சியிலும் இல்லை என்ற அளவுக்கு நாடறிந்த விஷயமாக உள்ளது. இப்போதைக்கு திமுகவைவிட்டால் வேறு எந்த கூட்டணியிலும் சேரமுடியாது என்பதை அறிந்துதான் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு என்பதற்கு அமைதிகாத்து வருகிறார்.
நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதீத நம்பிக்கை ஆபத்தில் முடியும்.
–மா.பாண்டியராஜ்