போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்றுமுன்தினம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக்கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததா தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு சட்டசபையில், மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.