சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஆசிரியர்களிடம் மாணவர்கள் தேன் கூடு கட்டி உள்ளதாகவும், அது கடித்தால் ஆபத்து எனவும் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளதால் ஆசிரியர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை, அந்த வழியாகச் சென்ற யாரோ ஒரு தனிநபர் கல் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தேனீக்கள் பறந்து வந்ததில் மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். தேனீக்கள் கடித்ததில் 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாயினர்.
இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.