பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரிந்திருந்த அதிமுக- பாஜக கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் இணைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கான தமிழ்நாட்டுத் தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் நியமிக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரு கட்சிகளும் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகின்றன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 4.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளது. இதில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 25.4.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக இணைந்த நிலையில் பிறகு நடைபெறும் ஆலோசனை கூட்டம் என்பதால் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.