நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறி விட்டு கூட்டணி வைத்துள்ளது யாரை ஏமாற்றும் நாடகம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கூட்டணி என கூறும் தகுதி அதிமுகவிற்கு உள்ளதா எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார வாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் கொண்டு வரப்பட்டது என்று குற்றச்சாடிய அவர் “2021 தேர்தலில் என்ன வாக்குறுதி தந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ம் ஆண்டு ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது உண்மைதான் எனக் கூறிய அவர், ஆனால் மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனவும், தற்போது கூட்டணி அமைத்துள்ள அதிமுகவினர் நீட் தேர்வு சம்பந்தமாக கண்டிஷன் போட தயாரா? எனவும் கேட்டார்.
இப்பொழுது கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே, இந்த கண்டிஷன் போட உங்களுக்கு அருகதை இருக்கிறதா? நாங்கள் யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. 2 மாதங்களுக்கு முன் 2026ல் மட்டுமல்ல, 2031ம் ஆண்டிலும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது கூட்டணி அமைத்து இருக்கிறீர்களே, யாரை ஏமாற்றும் நாடகம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், 11 மருத்துவ கல்லூரிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கூறினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வர அனுமதி அளித்ததற்காக, 11 மருத்துவக் கல்லூரிகளை பாஜக அரசு பரிசாக வழங்கியதாகவும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக விமர்சித்த அவர், இது வடிவேலுவின் பேக்கிரி நகைச்சுவை போலத்தான் நீட் உனக்கு மருத்துவக் கல்லூரி எனக்கு என சொல்வது போல பேக்கரி டீலிங் தான் என திட்டவட்டமாக கூறினார்