திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே வீசிச் சென்றுள்ளனர். மதுக்கூடமாக மாறிய பள்ளி வளாகம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இந்த செயலுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி அங்கு பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பள்ளியை சுற்றி மதில் சுவர் அமைப்பதுடன், கதவுகள் அமைத்து அந்நியர்கள் உள்ளே செல்லாத வகையில் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.