திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புலியனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் மனைவி மல்லிகா (60). ராணுவத்தில் பணியாற்றிய தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது நிலத்தில் வீடு கட்டி மல்லிகா வசித்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன் தனது மனைவி ஆதிலட்சுமியின் மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பாதுகாப்பாக தனது தாயிடம் கொடுத்து அவர் வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேல்மலையனூரில் நடைபெற்ற காதணி விழாவிற்கு மூதாட்டி மல்லிகா மற்றும் மகன் வேல்முருகன், மருமகள் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோவை கம்பியால் நெம்பி திறந்து அதில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவு போலீசார் விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.