கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே உள்ள மலைக்கிராமமான எம்.புதூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நேரு (57), அரிசி பெரியாங்குப்பம் பகுதி அதிமுக ஊராட்சி செயலாளராகவும் இருந்து வந்தார். ராமாபுரம் கிராமத்தில் அவருக்குச் சொந்தமான முந்திரி தோப்பில் கொட்டை பொறுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிக்கு விவசாயப் பெண் தொழிலாளர்களை அழைப்பதற்காக, அருகிலுள்ள நாயக்கநத்தம் காலனிக்கு நேற்று காலை சென்றார். அங்கிருந்து காலை 7 மணியளவில் விவசாயப் பெண் தொழிலாளர்களான பிரசாந்த் மனைவி சரண்யா (24), பாலாஜி மனைவி கல்பனா (23) ஆகிய இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலையைக் கடந்து ராமாபுரம் பழைய சாலையை நோக்கி திரும்ப முயன்றார்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார், இரு சக்கர வாகனம் மற்றும் அதில் இருந்த மூவரையும் சிறிது தூரம் இழுத்துச் சென்றது.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சரண்யாவும், கல்பனாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நேரு, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரும், அதிலிருந்தவர்களும் பின்னால் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
பதைபதைக்க வைத்த இந்த விபத்து மலைக்கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.