ம.தி.மு.க., முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின், அவரது மகன் துரை வையாபுரி, ‘துரை வைகோ’ என, பெயரை மாற்றிக் கொண்டு, அரசியல் களத்திற்கு வந்தார்.
இந்நிலையில், துவக்க காலம் முதல் கட்சியில் இருந்து வருபவரும், வைகோவுக்கு மிக நெருக்கமானவருமான துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது மோதலாக முற்றிய நிலையில், மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை துரை வைகோ மேற்கொண்டார்; அதை வைகோ ஏற்கவில்லை. ம.தி.மு.க., ஆரம்பித்தபோது, வைகோவுடன் வந்தவர்கள் இப்போது அவருடன் இல்லை. எஞ்சியிருப்பது சத்யா மட்டுமே என்பதால், அவரையும் இழக்க வைகோ விரும்பவில்லை.
இப்பிரச்னையில், தந்தை – மகன் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் இருந்து வந்தது. இதனால், கோபமடைந்த துரை வைகோ, முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இச்சூழ்நிலையில், ம.தி.மு.க.,வின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் துரை வைகோவுக்கு ஆதரவாக பேசினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி வைத்து விடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருக்கிறேன் என அவர் பேசியதாக தகவல் வெளியானது.
அறிவுரை
பிறகு துரை வைகோ – மல்லை சத்யா இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவதாக துரை வைகோ கூறியுள்ளார். கட்சிக்காக இணைந்து பணியாற்றுவோம் என்று இருவரும் நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவித்தனர்.