காலம், காலமாக கோயில்களுக்குள் நடக்கும் அரசியல் குறித்து வெளிப்படையாக பேச எல்லோரும் தயங்குகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என்ற ஒரு சிறிய கோரிக்கையைக் கூட இதுவரை யாரும் வைக்கவில்லை.
‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற தமிழ் பழமொழி பல நுாறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதன் மூலம் நாம் என்ன புரிந்து கொள்ள முடியும். தமிழ் கலாசாரத்தில் பல நுாறு ஆண்டுகளாகவே, செல்வத்திலும், செல்வாக்கிலும் வல்லமை பெற்றவர்களே சமூகத்தில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இப்போது இந்த நடைமுறை ‘ஜனநாயகம்’ என்ற ஒற்றை பெயரில் உருமாறி உள்ளது.
அரசாட்சிகள் நடந்த போது மட்டும், கோயில்களுக்குள் சமத்துவம் நிலவி வந்ததாக இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்கு தெரிந்தது எல்லாம் நாம் வாழும் காலத்திலேயே இந்து சமய அறநிலையத்துறை அமைக்கப்பட்டு கோயில்களின் நிர்வாகம் அந்த அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்பு தான் வெளிப்படையாக தெரிந்தது.
அதாவது அரசியல் பவர், அதிகார பவர் வைத்திருப்பவர்களுக்கு கோயில்களில் ஒரு பாதை. சில நேரங்களில் இவர்களுக்காக பல மணி நேரம் கோயில்களில் பக்தர்கள் நுழைய தடை கூட விதிக்கப்படுவதும் உண்டு. இவர்கள் மட்டும் தனியாக சென்று கோயில்களுக்குள் யாகம் நடத்தலாம். பூஜைகள் நடத்தலாம். கருவறைக்குள் கூட செல்லலாம். இவர்களே தீபம் ஏற்றி வழிபாடுகள் கூட செய்யலாம். இதெல்லாம் உச்ச அதிகாரம் கொண்டவர்களுக்கு மட்டுமே.
அடுத்து அதிகாரம் கொண்டவர்களுக்கு என சில சிறப்பு வசதிகள் உள்ளன. அதற்கடுத்த வரிசைக்கு பணம் வந்து நிற்கிறது. அதாவது ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என கட்டணம் செலுத்தினால் மிக, மிக அருகில் சாமியை உடனே தரிசிக்கலாம். 500 ரூபாய் கட்டணம் என்றால் சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம்.
200 ரூபாய் கட்டணம் என்றால் அதற்கொரு வரிசை… இலவச கட்டணம் என்றால் பல மணி நேரம், ஏன் ஓரிரு நாட்கள் கூட வரிசையில் நிற்க வேண்டும். சாமியை தரிசனம் செய்யவே ஏழைகள் இப்படி ஒரு போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. சாமி தரிசனத்திற்கு சென்று நெரிசலில் சிக்கி, உயிரிழந்த கொடுமைகளும் நடந்தது உண்டு.
இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா முழுவதுமே உள்ளது. கோயில்களில் சமநிலை இல்லை என்பது பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். இதில் சிலர் வரம்பு மீறி யாகம், பூஜைகள் என நடத்துவார்கள். அவர்களுக்கு தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக கோயில் கதவுகள் கூட ஆகம விதிகளை மீறி பல மணி நேரம் பூட்டப்பட்டிருக்கும்.
இந்த கொடுமை ராமேஸ்வரத்தில் தொடங்கி, மதுரை மீனாட்சியம்மன், திருச்சி ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, திருப்பதி என காஷ்மீர் பனி லிங்க தரிசனம் வரை நீடிக்கிறது.
பெண் (ஆ)சாமியார்
கடந்த வாரம் ஒரு விளம்பர பெண் சாமியார் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். இவரை கோயில் கருவறை வரை அழைத்துச் சென்று சாமிக்கு போட்டிருந்த மாலையினை எடுத்து அந்த விளம்பர பெண் சாமியார் கழுத்தில் அணிவித்துள்ளனர்.
அவர் கோயில் விதிகளை மீறி பராசக்தி சிலை முன்பு நின்று போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார். (அவரது முந்தைய வாழ்க்கை நிலையை இங்கு கூறினால் இந்த கட்டுரையின் பண்புகூட தரம்கெட்டு போய்விடும்)
ஏழைகளால் கோயில் வாசலுக்குள் கூட நுழைய முடியாது. அந்த அளவு கூட்டம் இருக்கும் நிலையில், இவர் ஒரு சிறிய அளவிலான சூட்டிங்கையே திருண்ணாமலை கருவறையின் அருகே நடத்தி முடித்துள்ளார். யார் இதற்கு அனுமதி அளித்தார்கள்? கோயிலில் ஒரு தனி மனிதர் இப்படி செய்யலாமா? இதற்கு கோயில் ஆகம விதிகள் அனுமதி அளிக்கின்றனவா?
இதற்குத் தான் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று பெயரிட்டுள்ளனர். இதனை சரி செய்யவே முடியாது. இந்த அராஜகம் தாங்காமல் சிலர் இந்த சினிமா சூட்டிங் படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு,அது தமிழகம் முழுவதும் பரவி கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
சாமி கும்பிடுவதில் நிலவும் பாரபட்சத்தை தீர்க்க தமிழகத்தை ஆட்சி செய்த மிகப்பெரிய ஞானி கருணாநிதியால் கூட முடியவில்லை. அவர் எப்படியாவது சரி செய்ய வேண்டும் என முயன்று சரிசெய்யாமலேயே சென்று விட்டார். கோயில் சாப்பாட்டிலாவது சமத்துவத்தை கொண்டு வரலாம் என சமபந்தி முறையை கொண்டு வந்தனர். இப்போது கோயில் சாப்பாடு கேரியர்களில் அதிகாரிகளின் வீடுகளுக்கு சென்று விடுகிறது.
உண்மையான பக்திக்கு எல்லையே இல்லை. இறைவன் நம் உள்ளத்தில் தான் குடியிருக்கிறார். கோயில் அருகே சென்று நாம் உள்ளத்தில் உள்ள இறைவனை வணங்கிக் கொள்வோம் என விவரம் அறிந்து எதிர்த்து போராட தெம்பு இல்லாத அத்தனை நடுத்தர, ஏழை மக்களும் முடிவு செய்து விட்டனர். காரணம் இன்று ஒரு குடும்பம் உள்ளூரில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரக்கூட சில நுாறு ரூபாய்கள் செலவிட வேண்டி உள்ளது.
செலவு செய்து சாமி தரிசனம்
வெளியூர் கோயில்கள் என்றால் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்தே ஆக வேண்டும். இந்த சிக்கலி்ல் இருந்து மீண்டு வர வழியே இல்லை. இது போன்று இன்னும் தீர்க்க முடியாத… தீர்க்கப்படாத பல நுாறு பிரச்னைகள் இந்து கோயில்களுக்குள் உள்ளன.
தமிழக முதல்வர், துணை முதல்வர் சாமி கும்பிடுவார்களா? இல்லையா? என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் தமிழகத்தில் உள்ள பல கோடி இந்துக்களுக்கும் இவர்கள் தான் முதல்வர், துணை முதல்வர். தமிழக மக்கள் தங்கள் சிக்கல்களை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பித்தான் இவர்களுக்கு ஓட்டளித்து அரசாட்சியில் அமர வைத்துள்ளனர். இவர்கள் மத ரீதியான பாரபட்சம் காட்டுவதாக பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. அதுவும் இந்து மக்களை கண்டுகொள்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.
இந்த விமர்சனத்தில் இருந்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வெளியே வர வேண்டும். தவிர உங்களுக்கு ஓட்டளித்த இந்து மத ஏழைகளும் கோயில்களில் நிம்மதியாக சாமி கும்பிட தேவையான வழிமுறைகளை உருவாக்கித்தர வேண்டும்.
பிரசாத முகபாவனை
அறநிலையத்துறை, கோயில்களின் வருவாயை மட்டுமே கவனத்தில்கொள்ளக்கூடாது. சாதாரண மக்களும் எளிதாக ஆண்டவனை தரிசிக்கும் நிலையை ஏற்படுத்த முனையவேண்டும். பல கோயில்களில், காசைக்கட்டினால்தான் அர்ச்சகரே சிரித்தபடி பிரசாதம் தருகிறார். காசைக்கனவில்லை என்றால் பிரசாதத்தை அள்ளி ‘வெடுக்கென’ போடுவார். இப்படி அற்பத்தனமான நடவடிக்கைகளையும் தாண்டி ஒரு உண்மையான பக்தர் சாமி தரிசனம் முடித்து வெளியேறவேண்டும்.
சமத்துவ சமூகநீதி
ஒரு கிறிஸ்தவ சர்ச்சிக்குள், உலகின் மிகப்பெரிய நாட்டை ஆண்ட ஒபாமா சென்றாலும் சரி, சாதாரண ஒரு குடிமகன் சென்றாலும் சரி, இருவருக்குமே அங்கு ஒரே இருக்கைதான். ஆண்டவனை தரிசிப்பதில் அங்கு வேற்றுமைகள் கிடையாது.
சமநீதி சமத்துவம் பேசும் நமது ஆட்சியில் கோயில்களில் சாதாரண மக்களுக்கு அந்த சமத்துவம் கிடைத்துவிட்டால் அங்கும் சமூகநீதி பாதுகாக்கப்படுமே!
-மா.பாண்டியராஜ்