”கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்’.இல்லையென்றால் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில கல்வி நிறுவனங்களின் பெயரில் ஜாதிப் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அந்த கல்வி நிறுவனம் வேன், கல்வி வளாகத்தில் இருக்கும் பெயர் பலகை உள்ளிட்டவையில் ஜாதி பெயருடன் கல்வி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், ”கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்’. அவ்வாறு நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது பிறப்பித்துள்ள உத்தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன :-
1. ஜாதி பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
2. ஜாதி பெயர்களைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும்.
3. கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென்றால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
4. அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் பெயர்களை, அரசுப்பள்ளி என மாற்ற வேண்டும்.
5. பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது. இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாலும், கைகளில் ஜாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதி உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.