திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில். பௌர்ணமி, தீபம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். கிரிவலம் வருவதற்காக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம்.
ஆனால், தற்போது அந்த நிலை மாறி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தினமும் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுமார் 14 கி.மீ. ஆகும். அதனால் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மூன்று கி..மீட்டர்களுக்கு இடையே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
அந்த கழிவறைகளை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.5. அதுவும் அந்த கழிவறைகளை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும், தூய்மை செய்வதற்கான பெனாயில், ஆசிட் , விளக்குமாறு போன்றவைகளை வாங்கிக்கொள்வதற்காகவும், மேலும் கழிவறைகளை மேலாண்மை செய்பவருக்கு சம்பளமாகவும் அந்த 5 ரூபாயில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், கிரிவலப்பாதையில் தூர்வாசகர் கோயில் எதிரில் உள்ள கழிவறையில் கட்டணம் வாங்குவது கட்டணக்கொள்ளையாக நடந்துவருகிறது என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐந்து ரூபாய் கட்டணம் வாங்குவதற்கு பதிலாக ஆட்களைப்பொறுத்து 10 ரூபாய், 20 ரூபாய் என்று மிரட்டி வசூல் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், மாநகராட்சிக்கும், ஊராட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நிம்மதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இதைப்போல அடாவடியாக கட்டணத்தை மிரட்டி வாங்கும் கழிவறையை மேற்பார்வை செய்பவர் மீது உடனடியாக மாநகராட்சி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.