காட்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அதை சுற்றியுள்ள லத்தேரியை அடுத்த கம்பத்தம் குளத்து மேடு பகுதியில் 15 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் மின் கம்பம் முறிந்து மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடந்த 6 நாட்களாக மின்சார இணைப்பு இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அந்தப் பகுதி வயல் வெளி பகுதியாக இருப்பதால் விஷ பூச்சி மற்றும் பாம்புகளின் தொல்லையால் அதற்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர்..
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் வயது பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். கர்ப்பிணிப் பெண்களும் இருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் அதிகமான பூச்சி மற்றும் விஷப்பாம்புகளும் உள்ளது.
மேலும் ஊரின் கடைசி பகுதியாக இருப்பதால் திருட்டு தொந்தரவும் அதிகமாக உள்ளது.
இதை எல்லாம் மின்வாரிய அதிகாரியிடம் சொல்லி எங்களுக்கு உடனடியாக மின் இணைப்புகளை சரி செய்ய கேட்டதற்கு, அவர்கள் எங்களால் முடிந்த அளவிற்கு தான் செய்ய முடியும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் அளிக்கிறார்கள் என்று மிகவும் வேதனையோடும் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகனிடமும் சென்று முறையிட்டுள்ளனர். அவரும் அதிகாரிகளுடன் பேசி விரைவில் மின் இணைப்பு பெற்று தருவதாக அவர்களுக்கு உறுதி அளித்தார்.