போளூர் அருகே போலீஸ் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஆதமங்கலம் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் குமரன். இவர் மிருகண்ட அணையிலிருந்து 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் சட்டவிரோதமாக வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆதமங்கலம் புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் 4 போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது பின்னால் வந்த உதவி ஆய்வாளர் நாகராஜனை வழக்கறிஞர் குமரன் தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதாகவும், ஒரு கட்டத்தில் சட்டையைப் பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கூடுதலாக காவலர்கள் வரவழைக்கப்பட்டு, மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜே.சி.பி. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உடனடியாக போளூர் டி.எஸ்.பி. மனோகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிக்கு அதிவிரைவுப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் குமரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.