2026-இல் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பேசியது அ.தி.மு.க.வினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2026-இல் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தார். இந்தப் பேச்சால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியா அல்லது பா.ஜ.க. தலைமையில் கூட்டணியா என்ற குழப்பம் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கும் நிலையில், பா.ஜ.க. மாநில நிர்வாகி இதுபோல குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.