அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் என்று சீமான் கலகலப்பாக கூறி உள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று (8ம் தேதி) ஆஜரானார். டிஐஜி., வருண்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமா கூறியதாவது :-
உலகத்தில் நம்மிடம் எண்ணெய் வளம் இல்லை.கச்சா எண்ணெய் மூலப்பொருள் விலை குறையும் போது அந்த பொருளின் விலை இங்கே குறையணும். ஆனால் மேற்கொண்டு விலையை நீட்டித்தால் இது என்ன மாதிரியான நிர்வாகம். இது மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் தானா என்பதை யோசிக்கணும்.
அதற்கான விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவு தான் இவ்வளவோ பிரச்னையாக இருக்கு. மூலப்பொருள் விலை குறைந்தாலும் விலை குறையாது என்பது மிக கொடுமையானது என்றார்.
இந்த பதிலைக் கேட்ட செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு,
நீங்க பா.ஜ.க., வுடன் நெருக்கமாக இருப்பது போன்று இருக்கிறதே என்று கேட்டார். அவருக்கு பதிலளித்த சீமான், நியாயமாக பாத்தா நான் டிரம்ப் கூட ரொம்ப நெருக்கம்.(சிரிக்கிறார்) அவருடன் தான் இருக்கேன். நீங்க அதை யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்க. அப்புறம் புதின். ரெண்டு பேரும் தான் என்னுடன் ரொம்ப நெருக்கம் என்றார்.
கட்சி வேற.. கொள்கை வேற. ஆனால் நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? இப்போது தி.மு.க.,வை கோட்பாட்டளவில் எதிர்க்கிறோம். அங்கே 99 பேர் என் சொந்தக்காரனாக இருக்கிறான். எல்லாருடன் சண்டை போட்டுக்கிறதா? அப்படி எல்லாம் பேசிட்டு இருக்கக்கூடாது. அரசியல் கோட்பாட்டில் இருந்து மனித உறவுகளை பிரித்துப் பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
அப்போது மற்றொரு செய்தியாளர், இந்த முறையும் தேர்தலில் தனித்து போட்டி தானா என்று குறுக்கிட்டார். அவருக்கு பதிலளித்த சீமான், இன்னும் ஒரு 6 மாதம் இருக்கிறதா தேர்தலுக்கு? கொஞ்சம் பொறுத்திருங்களேன் என்றார். (தனித்துத்தான் போட்டி என்று அழுத்தம் திருத்தமாக சீமான் கூறி வந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது)
தொடர்ந்து சீமான் பேசியதாவது:-
கவர்னர் என்பவர் ஒரு தொங்கு சதை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களுக்குத் தான் அதிகாரம் இருக்கணும். அதைவிட்டு விட்டு ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகளவு அதிகாரம் இருக்கணும் என்றால் மக்களாட்சி என்கிற கோட்பாடு கேள்விக்குறியாகி விடும். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் அவசியம் இல்லை என்பது அண்ணாதுரை காலத்தில் இருந்தே சொல்லி வருகிறோம்.
தேர்தல் நெருங்க,நெருங்க வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடக்கும். இதில் புதிது ஒன்றும் இல்லை. நாட்டு விடுதலைக்கு பாடுபட்டவன் எல்லாம் தியாகி. சாராய ஆலை நடத்துபவருக்கு சாராயத்தை நல்லா வித்து கொடுப்பவன் எல்லாம் தியாகி.
சட்டசபையில் மக்கள் பிரச்னை எங்கே பேசப்படுகிறது? கச்சத்தீவு, நீட் தீர்மானம் வந்தால் அதை பற்றி பேசுகிறோம். ஆட்சி மாறவேண்டும் என்பதை இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமக்களும் நினைக்க வேண்டும். கட்சிகள் கூடி, கூட்டணி சேர்ந்து மாற்றத்தை உருவாக்கிடுவாங்க என்று நினைக்கக்கூடாது.
எங்களின் கொள்கை மொழி உயிர்மொழி தமிழ். பயன்பாட்டு மொழி ஆங்கிலம். உலகத்தின் எல்லா மொழிகளும் எங்களின் விருப்ப மொழி.
இவ்வாறு சீமான் பேசினார்.