தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட்டை ஊடுறுவி ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த ராஜவாய்க்கால் மேல்பாகத்தை மூடித்தான் பஸ்ஸ்டாண்ட் இயங்குகிறது. பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், சிவராம்நகர், கே.ஆர்.ஆர்., நகர் தேனி பகுதியில் இருந்து வரும் ஒட்டு மொத்த மழை நீரும், இந்த ராஜவாய்க்காலில் கலந்து வெளியேறும் வகையில் தான் நகரின் அமைப்பு இருந்தது.
அப்போது ராஜவாய்க்கால் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு இருந்தது. ராஜவாய்க்கால் தண்ணீரை மக்கள் குடித்தனர். குளித்தனர். அங்கு மீன் பிடித்தனர். இதெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இப்போது நகரின் ஒட்டுமொத்தமான மழை நீர் வழிந்தோடும் கட்டமைப்பும் அழிக்கப்பட்டு விட்டது. ராஜவாய்க்காலின் மேலேயே பஸ்ஸ்டாண்ட் வந்தது. தண்ணீர் வரும் கால்வாய்கள் சாக்கடை கால்வாய்களாக மாறி விட்டன.
தண்ணீர் கடந்து செல்ல வழியில்லை. 10 செ.மீ., மழை பெய்தாலும் தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும். இந்த சிக்கல் 40 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்த தண்ணீரின் தரம் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சகதியாகவும், கழிவுநீராகவும் மாறி தற்போது முழுச்சகதியாகவே மாறி விட்டது.
நகரில் மழை பெய்தால் பஸ்ஸ்டாண்ட் பரிதவித்து விடும். மழை நின்ற பின்னர் சகதியில் இருந்து மக்கள் மீள்வதற்கு குறைந்தது 2 அல்லது 3 நாள் தேவைப்படும். தொடர் மழை பெய்தால் அவர்கள் கதி அதோ கதியாகி விடும். நகராட்சியும் இந்த வாய்ப்பினை தனக்கு கிடைத்த அட்சய பாத்திரமாகவே பயன்படுத்தியது. பழைய பஸ்ஸ்டாண்ட் கழிவுநீர் பிரச்னையை சீரமைக்க, புதுப்பிக்க, சரி செய்ய என பல காரணங்களை சொல்லி கடந்த 30 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் செலவு கணக்கு எழுதி, பணத்தை எடுத்து காலி செய்து விட்டார்கள். ஒருமுறையாவது இவர்கள் மிகவும் சரியாக பணி செய்திருந்தால், இந்த சிக்கலை எளிதாக தீர்த்திருக்கலாம்.
நகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை இந்த சிக்கலை காட்டி எவ்வளவு கணக்கு எழுதலாம் என்பது மட்டுமே தான். துல்லியமான பணிகளை ஒருபோதும் செய்ததில்லை. நகராட்சியின் 30 ஆண்டு வரவு செலவை தணிக்கை செய்தால், இந்த விவரம் நகராட்சி இயக்குனரகத்திற்கே தெரியவரும்.
இப்போது சிக்கல் உச்சத்தை எட்டி உள்ளது. சகதி சூழ்ந்தால் நேரு சிலை பகுதியில் இருந்து மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு, பஸ்ஸ்டாண்ட் என அத்தனை பகுதிகளும் சகதிக்குள் மூழ்கி விடும். நகரின் இருதய பகுதியாக இந்த இடத்தை கடந்து தான் ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பும் உள்ளது. இதனால் மக்கள் தவித்து விடுவார்கள். இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளை திறக்கவே முடியாது.
திறந்தாலும் உள்ளே அமர முடியாது. அந்த அளவு துர்நாற்றம், சுகாதார சீர்கேடு இருக்கும். இவ்வளவையும் சகித்துக்கொண்டு அமர்ந்தாலும், யாரும் கடைக்கு வர முடியாது. அவ்வளவு சகதிகளை தாண்டி மக்கள் கடைக்கு வர மாட்டார்கள். இப்படி 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 30 ஆண்டாக தவிக்கின்றனர். இந்த சிக்கல் இப்போதும் உள்ளது. கடந்த 3 நாட்களாக தேனியில் சராசரியாக தினமும் 30 செ.மீ., மழை பதிவாகி வருகிறது. பழைய பஸ்ஸ்டண்ட் தவிக்கிறது.
புதிய மாவட்ட கலெக்டர், தொகுதிக்கான அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் இந்த விஷயத்தை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி வாங்கி சிறப்பு திட்டத்தை செயல்படுத்தினால் விடிவு பிறக்கும். இது இங்குள்ள 300 வியாபாரிகளை மட்டும் பாதிக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் மழை பெய்தால், பழைய பஸ்ஸ்டாண்டில் தேங்கும் சகதி நீரால் குறைந்தது பல ஆயிரம் பேர் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் கனிவுடன் கவனம் செலுத்த வேண்டும். நகராட்சிக்கு தனி சிறப்பு நிதி கொடுத்து, சிறப்பு கண்காணிப்புக்குழுவும் அமைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் கொடுத்த சிறப்பு நிதி கழிவுநீரோடு கலந்து விடும்.
-நிருபர் தேனி பாண்டியராஜ்.