இப்போது தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பது இந்த கேள்விக்கான பதில் மட்டுமே. ஏப்.,9ம் தேதி இதற்கான விடை கிடைத்து விடும்.
ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதர கட்சிகள் என தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் இவர் வேண்டவே வேண்டாம்… இவரை எப்படியாவது மாற்றுங்கள் என்று டெல்லிக்குச் சென்று முறையிட்டது அண்ணாமலையை பற்றி மட்டுமே.
இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சித் தலைமைக்கும் எதிராக இப்படி ஒரு மாநிலம் முழுவதும் உள்ள அத்தனை கட்சிகளும் அணிவகுத்து நின்றதில்லை. குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என எத்தனையோ ஆளுமைகள் இருந்தும், அண்ணாமலையை கண்டு பயந்தது போல் எந்த கட்சிகளும் இதற்கு முன்னர் கூறிய தலைவர்களை கண்டு பயந்தது இல்லை என்று பகிரங்கமாகவே கூறலாம்.
இப்போது பத்திரிக்கைகள், விஷூவல் மீடியாக்கள், சோசியல் மீடியாக்கள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் பேச்சாளர்கள் என அத்தனை பேரையும் விவாதத்தில் எதிர்கொண்டதில் அண்ணாமலைக்கு நிகரான அரசியல் ஆளுமையினை இதுவரை தமிழகம் கண்டதில்லை.
ஆளும் கட்சிக்கு எதிராக ஊழல் புயலை கிளப்பி, ஆளும் கட்சி அமைச்சர்களை ஜெயிலுக்கு அனுப்பி, சிலரை பதவியிழக்க வைத்து, பலரது இலாக்காக்களை மாற்றவும் காரணமாக இருந்தவர் அண்ணாமலை.
இப்படி ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல், எதிர்க்கட்சிக்கு எதிரான அரசியல், இதர கட்சிகளுக்கு எதிரான அரசியல் என எந்த பேதமும் இன்றி தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்தியவர் அண்ணாமலை. இப்படிப்பட்ட தலைவரை மாற்றினால் கூட்டணி? மாற்றாவிட்டால் கூட்டணி கிடையாது? என எடப்பாடி பழனிசாமி டெல்லி தலைமைக்கு செக் வைத்துள்ளார் என்ற தகவல் தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி தலைமையும் அண்ணாமலையிடம் பேசியது. அதன் பின்னர் அண்ணாமலை தனக்கு மிகவும் நம்பகமான சாணக்யா வெப்சைட்டிற்கு கொடுத்த பேட்டியில், ‘எனக்கு தனிப்பட்ட நலனை விட கட்சியின் நலன் தான் மிகவும் முக்கியம், கட்சி என்ன வேலை சொல்கிறதோ, அதனை செய்வது மட்டும் தான் எனது வேலை’ என கூறியிருந்தார்.
ஆக தலைமை தன்னை மாற்ற நினைத்தால் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை எனவும் அண்ணாமலை வெளிப்படையாகவே பேசியிருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் இருமுறை டெல்லி சென்று வந்தார். முதல்முறை நிர்மலா சீதாராமனையும், அமித்ஷாவையும் சந்தித்தார். இரண்டாம் முறை யாரை சந்தித்தார் என்பது தெரியவில்லை. இப்போது ஓ.பி.எஸ்., டெல்லியில் இருக்கிறார். இப்படி தமிழக அரசியல் களம் அதளகப்பட்டு கிடக்கையில், நேற்று முன்தினம் காலை முதல் அண்ணாமலை மாறுகிறார்? அடுத்த தலைவர் யார்? என்ற விவாதங்கள் புறப்பட்டு விட்டன.
இந்த ரேசில் நயினார்நாகேந்திரன் முந்துகிறார், இரண்டாம் இடத்தில் சரத்குமார், தமிழிசை சௌந்தரராஜன் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் றெக்கை கட்டிப் பறந்தன. அண்ணாமலை அளவுக்கு வலுவான தலைவர் யாராவது தமிழகத்தில் இருக்கிறார்களா என்பதை கண்டறியவே மத்திய பா.ஜ.க., தலைமை அண்ணாமலையை படிப்பு என்ற காரணத்தை கூறி மூன்று மாதம் வெளிநாடு அனுப்பியது.
அந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க., தலைவர்கள் யாரும், தங்களது அரசியல் ஆளுமைத்திறனை நிரூபிக்கவில்லை. மத்தியில் செல்வாக்குடன் திகழ்வது வேறு, அரசியல் ஆளுமையுடன் திகழ்வது வேறு. பா.ஜ.க.,வை பொறுத்தவரை ஆளுமை உள்ள நபர்களை மட்டுமே தேர்வு செய்யும். செல்வாக்கு உள்ள நபர்களை கண்டுகொள்ளாது.
இப்படி மாற்று தலைவர் இல்லாத நிலையில், ஒரு வலிமை வாய்ந்த தலைமையை பா.ஜ.க., மாற்றாது என்றே அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். தவிர அண்ணாமலையை மாற்றினால் தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க., பெரும் பின்னடைவினை சந்திக்கும். அண்ணாமலை மாற்றப்படுவதை தமிழக மக்களும், குறிப்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் மக்களும் கூட விரும்பவில்லை.
பா.ஜ.க.,வினர் மற்றும் பா.ஜ.க., ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் என்று மத்திய உளவுத்துறைகள் அனுப்பிய அறிக்கையும் அமித்ஷாவின் கைகளில் இருக்கிறது. எல்லாவற்றையும் விட தமிழக அரசியல் நிலவரம், ஆட்சி நிலவரம், கட்சிகளின் நிலவரம், இதில் பா.ஜ.க., தலைவர்களின் திறமைகள், அவர்களது நிலைப்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியும் டெல்லிக்கு அனுப்பிய அறிக்கையும் அமித்ஷாவின் கைகளில் உள்ளது.
இதனை வைத்து கணித்தால், (கணிப்பு தான்) அண்ணாமலை பதவிக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் பா.ஜ.க.,வில் மட்டும் என்ன நடக்கும் என்பதை கடைசி நிமிடம் வரை கணிக்கவே முடியாது. காரணம் பா,ஜ.க., பல்ஸ் பார்ப்பதற்காக இது போன்ற நாடகங்களை நடத்தும், மற்றொன்று தி.மு.க.,வை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது.
இன்னொன்று அண்ணாமலையை மாற்றினால் இதனை விட வேறு வலுவான காரணம், காரியம் ஒன்று வைத்திருக்கும், எப்போதுமே டூவிஸ்ட் அடிப்பதில் அந்த கட்சிக்கு நிகரான வேறு கட்சிகள் இல்லை. இதனால் அண்ணாமலை விவகாரத்தில் என்ன நடக்கும் என கணிப்பது மிகவும் சிரமம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. வரும் 9ம் தேதி வரை காத்திருப்போம்.
-மா.பாண்டியராஜ்