ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூருவில் இருந்து ஒடிசாவில் உள்ள காமாக்யாவுக்கு சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள் ரயில், இன்று காலை 11:54 மணிக்கு ஒடிசாவின் மங்குலி ரயில் நிலையம் அருகே சென்றபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 11 பெட்டிகள் தடம் புரண்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஒரு பயணி உயிரிழந்ததாகவும், 22 பேர் காயமுற்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் பணி ரயிலும், மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளை முடிந்த அளவு விரைவாக தொடங்கச் செய்ய முயற்சித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ரயில் விபத்து குறித்து உதவி பெறுவதற்கு, 8991124238, 8455885999 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.