அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தார். மத்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மூத்ததலைவர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை ரகிசயமாக சந்தித்தார் என கூறப்படும் நிலையில் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் கொங்கு மண்டல ஜாம்பவான் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு விழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன் இபிஎஸ்-ஐ தவிர்த்து வந்தார். இதர தலைவர்களிடம் பட்டும்படாமல் இருந்து வருகிறார். கட்சியில் இது சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தற்போது வரை ஒற்றுமையாகவும் பலமாகவும் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்றிரவே, 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம் என்றும் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும் என்றும் பேசினார்.
இது இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியுடன் பிணக்கு கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அமித் ஷாவை ரகசியமாக சந்தித்திருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இபிஎஸ்-ஐ சந்தித்த இரண்டு நாட்களிலேயே செங்கோட்டையனை அமித் ஷா பார்த்திருப்பது அதுவும் அண்ணாமலை உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சூழலில் சந்தித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது அரசியலாக பேசப்பட்ட நிலையில் தற்போது செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கை ஓங்கி வருவதை இது காட்டுவதாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.