திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு ஆணையர் (பொறுப்பு) செல்வதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் ஆரணி நகராட்சிக்குபட்ட 33 வார்டுகளில் தற்போது 31 கவுன்சிலர்கள்
மட்டும் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 31 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மட்டும் கூட்டத்தை புறக்கணித்தனர் இதனால் கூட்டம் நடைபெற்று அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அ.தி.மு.க. நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு உள்ளிட்ட 7 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை எதிர்த்து புறக்கணித்த அ.தி.மு.க. 6 கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. நகர மன்ற துணைதலைவர் பாரிபாபு கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசியதாவது :
நகரமன்ற கூட்டத்தில் வருடாந்திர கணக்கு கேட்கப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்வதாககூறி கூட்டத்தை புறக்கணித்தோம், என்றனர்.அ.தி.மு.க. உட்கட்சி பூசலில் 14 கவுன்சிலர்களில் எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஆதரவில் ரம்யாகுமரன், மோகன், தேவராஜ் ஆகிய 3 கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆதரவில் சசிகலாசேகர், கிருபா சமுத்திரிசதிஷ், சிவக்குமார் ஆகிய 3 கவுன்சிலர்களும் மற்ற அ.தி.மு.க கவுன்சிலர்கள் துணை சேர்மன் பாரிபாபு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் உட்கட்சியில் உள்ள பிரச்சினைகளை நகர மன்ற கூட்டத்தில் எடுத்து வைத்து அரசியல் நடத்துவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.