திண்டிவனம் அருகே கடன் சுமை அதிகரித்ததால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக கிளைச் செயலாளர் கமலக்கண்ணன். இவர் திண்டிவனத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கடையில் வேலை செய்து வந்தார். வீடு கட்டுவதற்கும், பெண்ணின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள சமையலறையில் மேற்கூரையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றிருந்த மகன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தந்தை தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்த அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தந்தையின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.