கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில், பள்ளி வளாகத்தின் வெளியே பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினரை தாக்கியது, காவல் பேருந்து வாகனத்தை எரித்தது உள்ளிட்ட அரசு சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று 121 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சிறப்பு புலனாய்வு போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா, வழக்கை ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே நாற்பதாயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று முதல் முறையாக விசாரணைக்கு வழக்கு வந்தது. இதனால் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.