10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (28ம் தேதி ) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தற்போது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்வுகள் நடைபெறும் போது, பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்து அரசுத் தேர்வுத்துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 ம் தேதி தொடங்கி, மார்ச் 25 ம் தேதி வரை நடைபெற்றது. அதே போல், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று (மார்ச் 27ம் தேதி ) முடிவடைந்தது. இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை, 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வினை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்கள் ஏற்பாடுகள்:
பொதுத் தேர்வு நடைபெறும் மையங்கள் காற்றோட்டமான அறைகளுடன், குடிநீர், கழிப்பறை தடையில்லாத மின்சார உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகளை கண்காணிக்க நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பணிகளையும் வரையறை செய்து அரசுத் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதில், தேர்வுகள் நடைபெறும் போது, பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை வழிமுறைகள்:
- பறக்கும் படையில் தேர்வுப் பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான (குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள) ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
- பெண் தேர்வர்களைச் சோதனையிட பெண் ஆசிரியர்களையும் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமித்தல் வேண்டும்.
- பறக்கும் படையில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் மிக நேர்மையுடன் உண்மையான முறையில் செயல்பட வேண்டும்.
- எவரிடத்திலும் அச்சமின்றியும், பொறுப்பினை எல்லை மீறாமல் செயல்பட வேண்டும்.
- புகார்களுக்கு இடமளிக்கக் கூடிய தேர்வு மையங்களைப் பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
- அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிலையான படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
- பறக்கும் படையினர் தங்களது பணியை ஆற்றும் போது தேர்வெழுதும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும்.
- ஒழுங்கீனச் செயலில் ஈடுபடும் மாணவர்களை பறக்கும் படையினர் கையும், களவுமாகப் பிடிக்கும் போது, தேர்வரிடமிருந்து கைப்பற்றிய விடைத்தாள் மற்றும் ஏனைய ஆவணங்களில், சம்பந்தப்பட்ட தேர்வரால் அவரின் பதிவெண்ணைக் குறிப்பிடச்செய்து, அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையையும் தெளிவாக எழுதி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும்.
தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். - சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை.
- தேர்வு முடிந்த பின் மாணவர்களை அமைதியாக அறையை விட்டு வெளியேற்ற வேண்டும்.
- தவறுகளைக் கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமை ஆற்ற வேண்டும்.
- தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட தேர்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்நிகழ்வு குறித்து பறக்கும் படையினர், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர் தன்னிச்சையாக பத்திரிகைத் துறை மற்றும் தொலைக்காட்சிக்கு தெரிவிக்கக்கூடாது.
- முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் போன்ற ஆய்வு அலுவலர்களிடம் மட்டும் தான் தெரியப்படுத்துதல் வேண்டும்.
- பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு எழுதும் வளாகம், வகுப்பறை, வெளிப்பகுதி மற்றும் கழிப்பறை பகுதிகளை பார்வையிட்டு, முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதனை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அறை எண்கள்:
மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075 , 9498383076 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.