தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்தியிலும் அறிக்கைகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது.
இந்தியா, ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தி திணிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கங்களில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதில் இருந்தே மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதை தமிழ்நாட்டு மக்கள்
உணர்ந்து கொள்ளவேண்டும். மற்ற தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் அந்தந்த மாநில மொழிகளுடன் ஆங்கில மொழி மட்டுமே உள்ள நிலையில் இந்தியை எதிர்க்கும் தமிழ்நாட்டில் இந்தியை கொண்டுவந்து அவர்களது ஆதிக்கத்தைக் காட்டுகின்றனர் என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.