கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிப்போருக்கு சிறப்பு குலுக்கல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு செய்யப்படும் 75 பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள்:
தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பயணிப்பவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்திற்கு https://www.tnstc.in மற்றும் அதன் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
தினசரி சராசரியாக 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. கோடை விடுமுறையையொட்டி சிறப்பு குலுக்கல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை ஆன்லைன் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் 75 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசாக 25 பேர், அனைத்து வகை பஸ்களிலும் முன்பதிவு செய்து ஒரு ஆண்டில் 20 முறை இலவசமாக பயணிக்கலாம். இரண்டாவது பரிசாக 25 பேர் 10 முறை, மூன்றாவது பரிசாக 25 பேர் 5 முறை இலவசமாக பயணிக்கலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படும் பயணிகள் வரும் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை பயணிக்கலாம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.