சேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை சேர்ந்த சபாபதி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சேட்டு(வயது 55), ஆகிய இருவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சபாபதி மற்றும் அவரது மனைவி கஸ்தூரி, மகன்கள் அன்பு, சின்னதுரை, மகள் மஞ்சுளா மற்றும் அன்புவின் மனைவி ஆகிய 6 பேர் சேர்ந்து சேட்டு மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களை சரமாரியாக தாக்கி அவரது சுண்டு விரலை உடைத்துள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சேட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் சபாபதி, கஸ்தூரி, அவரது மகன்கள் அன்பு, சின்னதுரை, மகள் மஞ்சுளா மற்றும் மருமகள் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சபாபதி கொடுத்த புகாரின் பேரில் சேட்டு தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.