திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மானை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்குச் செல்லும் வாய்க்கால் எறையூர் பகுதியில் கடந்து செல்கிறது. இந்தக் கால்வாயையொட்டி உள்ள வனப்பகுதியில் சுற்றித் திரியும் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக இந்த வாய்க்காலுக்கு அவ்வப்போது வந்து செல்லும்.
இதேபோல், நேற்று காலை இந்த வாய்க்காலில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய புள்ளி மான் தவறி விழுந்து நீரில் தத்தளித்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வானூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் திண்டிவனம் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் சிக்கிய புள்ளி மானை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அவர்கள் மீட்டவுடன் அந்த மான் காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றது.