சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.,வினை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன.
அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன முக்கிய தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பது போலவே தோன்றுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய சசிகலா மீண்டும் அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க சசிகலா ஒப்புக்கொண்டதாகக் கூறி அதிர வைத்திருக்கிறார், அதிமுகவின் வைகை செல்வன். சில மாதங்கள் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளது. சசிகலாவை சேர்க்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் சில சீனியர்கள் சொல்லியுள்ளார்கள்.
அதிமுக ஒரு எஃகு கோட்டை என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத் தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது.
இதனால் அதிமுக ஒன்றியணைய வேண்டும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. மேலும் செங்கோட்டையன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என பேசி வருகின்றனர். நீண்ட யோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவே கூறப்படுகிறது.
ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் தான் தான் என உறுதியாக இருக்கிறாராம், எடப்பாடி பழனிசாமி. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், அவைத் தலைவராக சசிகலா ஆகியோர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உறுதித் தன்மை தெரியவில்லை. இதற்கு இடையே எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க சசிகலா தயாராகி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரமேரூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகைச் செல்வன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்ள சசிகலா தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார், சசிகலா.
திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பேசி இருக்கிறார். இதனால் அதிமுக மீண்டும் ஒன்றிணைய போகிறது என்கின்றனர் அதிமுகவினர்.
ஒரே நாள் கடும் எதிர்ப்பை பதிவு செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாய்மூடி மௌனமாகி விட்டார். தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வந்த செங்கோட்டையன் சில நாட்களாக அடக்கியே வாசிக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், சில நாட்களாகவே உள்கட்சி விவகாரங்களில் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துகிறார்.
தி.மு.க., அரசியல் களத்தில் அதிரடியாக விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க.,வினை பின்பற்றும் அளவுக்கு அக்கட்சி அசுரத்தனமான வளர்ச்சி பெற்றுள்ளது. டாஸ்மாக் முறைகேடு உட்பட எந்த முறைகேடு புகார்களும் அக்கட்சியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. தவிர அ.தி.மு.க.,வின் உள்கட்டமைப்பு நொறுங்கிப்போய் கிடக்கிறது.
தி.மு.க.,வின் உள்கட்டமைப்பு இரும்பு கோட்டை போல் வலுவாக உள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளும் மிக, மிக வலுவுடன் உள்ளன. குறிப்பாக தி.மு.க., தன்னிடம் உள்ள தேவையில்லாத லக்கேஜ்களை கழட்டி விடலாமா? என ஆலோசித்து வருகிறது. அந்த அளவுக்கு அந்த கட்சி இப்போது வலுவான சூழலில் உள்ளது.
ஆனால் அ.தி.மு.க.,வின் வாக்கு வங்கியே சிதறிக் கிடக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்காகவும், இரட்டை இலைக்காகவும் ஓட்டுப்போட்டவர்களில் பலர் வாக்காளர் பட்டியலில் இல்லை. சமீபகாலமாக இறந்த வாக்காளர்களில் அதிகம் பேர் அ.தி.மு.க.,வினர் என்ற உறுதியற்ற ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இது பற்றி அ.தி.மு.க., தலைவர்கள் பலரும் உண்மை தான் என கூறிய செய்திகளும் வெளிவந்துள்ளன. மீதம் உள்ள பலர் வயது முதிர்வு உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் காரணமாக செயல் இழந்து விட்டனர். அல்லது விடை பெற்று விட்டனர். கிடுகிடுவென உயர்ந்து வரும் புதிய வாக்காளர்கள் பா.ஜ.கவா அல்லது த.வெ.காவா என்று முடிவெடுக்கும் நிலையில் உள்ளனர்.
புதிய வாக்காளர்களுக்கு அண்ணாமலையும், விஜய்யும் மட்டும் தான் சாய்ஸ். அதேபோல் எதிர்ப்பு ஓட்டுகள் அண்ணாமலை பக்கம் போய் விடக்கூடாது என்பதற்காகவும், அந்த ஓட்டுக்களை விஜய் பக்கம் திருப்பி விடவும் தி.மு.க.,வே சில நாடகங்களை நடத்தி வருகிறது.
இப்படி அரசியல் ரீதியாக மிகவும் கைதேர்ந்த ஒரு புத்திசாலித்தனமான ஒரு கட்சியை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்த தனக்கு முன்பு உள்ள அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனால் தீவிர சிந்தனையில் இருக்கும் எடப்பாடியும் ( சரி ஆட்டித்தான் வைப்போமே) தலையசைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. பொறுந்திருந்து பார்ப்போம். பொங்கி எழுமா..? பொசுக்கென்று போகுமா..?