‘எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில பிரதிநிதிகள் இருக்கைக்கு முன்பாகவும் வைக்கப்பட்ட பெயர் பலகையில், அந்தந்த மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அதேபோல், இந்தக் கூட்டத்தில் அவரவர் தாய் மொழியில் பேசும் கருத்தை மற்றவர்கள் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் பஞ்சாபியில் கேட்கும் வகையில் மொழிபெயர்ப்பு கருவியும் வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,
முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையாக, முதல்வர்கள், துணை முதல்வர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் இருந்து வந்திருந்து கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த உணர்வு, இந்தியாவின் கூட்டாட்சி முறையை பாதுகாப்பதிலும், நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்துவதிலும், நமது உறுதியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்த இயக்கம் என்பது, தொகுதி மறு வரையறைக்கு எதிரானது அல்ல. மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கேட்பது தான் இதன் நோக்கம். எங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த ஒரு முயற்சியும், எங்கள் குரல், எங்கள் உரிமை, எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல். எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். போராடுவோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்:
” ஒன்றிய அரசின் மாநிலங்களூடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை . பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும். ” இவ்வாறு அவர் பேசினார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி:
” மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்து போராடுவோம் டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பா.ஜ.க., நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள்
இந்த பிரச்னை குறித்து எங்களுடைய சட்டப்பேரவையில் விரைவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம். நீங்களும் உங்களுடைய மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள். தென் மாநிலங்களின் வலிமையான குரலை மொத்த இந்தியாவும் கேட்கட்டும்” என்று கூறினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும்; மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு”
காணொளி காட்சி மூலம், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது :-
“மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது; இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது 2026 மக்கள் தொகையின்படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை – சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்; ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதளம் போராடும்” என்றார்.
அதேபோல், கூட்டத்தில் பேசிய பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ், ‘உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேஷன் தமிழ்நாடு’ என புகழாரம் சூட்டினார்.
25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க தீர்மானம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கனிமொழி எம்.பி கூறியதாவது :-
இன்றைய (நேற்றைய ) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவோம். தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படைத் தன்மையுடன் மத்திய அரசு, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.
இதன் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.