எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் திரும்பி உள்ளது, கட்சி தலைமைக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., என்ற கட்சிக்கு இப்போது நேரமே சரியில்லை. எந்த நேரத்தில் ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் தொடங்கினாரோ அந்த யுத்தம்… தற்போது வரை வேறு, வெவ்வேறு இரண்டாம் கட்ட தலைவர்களால், வேறு உருவில் உருமாறி அ.தி.மு.க.,வை பாடாய்படுத்தி வருகிறது.
முதலில் பன்னீர்செல்வம் தான் எடப்பாடிக்கு எதிராக சண்டையைத் தொடங்கினார். அடுத்தடுத்து சிலர் வெளியேறி கட்சியே இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க., சின்னம் இரட்டை இலை முடக்கப்பட்டது.
பல நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் இரட்டை இலையை எடப்பாடி மீட்டாலும், இப்போது வரை அவரால் நிம்மதியாக கட்சி நடத்த முடியவில்லை.
ஜெயலலிதா இறந்த பிறகு நடந்த அத்தனை தேர்தல்களிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. அதன் பின்பும் கட்சியை மீட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்தார் எடப்பாடி. கட்சியில் ஒற்றைத் தலைமை வந்தால் சிக்கல் தீர்ந்து விடும் என நினைத்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர்., போன்றோ… ஜெயலலிதா போன்றோ… எடப்பாடியால் கட்சி நிர்வாகத்தில் எந்த ஆளுமையையும் செலுத்த முடியவில்லை. கட்சிக்கு தலைமை ஏற்றிருந்தாலும்… அவர் இப்போது வரை ஒரு சாதாரண தொண்டர் போன்ற நிலையில் தான் உள்ளார். அவரை கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவரது பலகீனங்களையும், தலைமையையும் கிண்டலடித்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் பிரச்னை ஏற்பட்டது. அவர்களை கெஞ்சி கதறி தான் எடப்பாடி பணியவைத்தார். ஜெயலலிதாவைப் போல் ஒரே பார்வையில், ஒரே மிரட்டலில், ஒரே நடவடிக்கையில் கட்டுப்படுத்தவில்லை. இப்போது வரை அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் தான் உள்ளனர். எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிடமுடியுமா என்கிறார்கள் கட்சிக்குள்ளேயே?
செங்கோட்டையன் பணிந்துள்ளாரா? பதுங்கி உள்ளாரா ?
இப்போது செங்கோட்டையன் கடும் பிரச்னை செய்து வருகிறார். தலைமை செயலகத்தில் எடப்பாடி நடத்திய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டத்தில் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. மாறாக எடப்பாடி யாருக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தாரோ அந்த சபாநாயகரையே தனியாக போய் சந்தித்தார் செங்கோட்டையன். தற்போது சமரசமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் செங்கோட்டையன் பணிந்துள்ளாரா? பதுங்கி உள்ளாரா என்று எடப்பாடிக்கே உள்ளுக்குள் ஒரு ‘கிலி’ இருக்கிறது என்கிறார்கள்.
ஜெயக்குமார் மிரட்டல்
செங்கோட்டையனை சமரசம் செய்ய அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் சட்டசபைக்குள் அமர்ந்து கொண்டே ஒருவர் மாறி, ஒருவர் சென்று கெஞ்சியதை ஒட்டுமொத்த தமிழகமும் வேடிக்கை பார்த்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, நான் எடப்பாடியை நம்புகிறேன். அவர் பா.ஜ.க.,வுடன் கூட்டணி சேர்ந்தால் கட்சியி்ல் இருந்து வெளியேறி விடுவேன் என மிரட்டினார்.
இதற்கும் எடப்பாடி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஜெயலலிதா இருக்கும் போது இப்படி யாராவது பேசி விட்டு ஒரு நொடி கூட கட்சியில் நீடிக்க முடியாது. கட்சித் தலைமைக்கு எதிராக பேசியவர்களை துவம்சம் செய்திருப்பார்.
கட்சி தலைமைக்கு தன் விஷயம் தெரிந்தால், பதவியும் போய் விடும், நாம் காணாமல் போய் விடுவோம் என்று அ.தி.மு.க.,வினர் அத்தனை பேரும் கலங்கிப்போய் இருந்த காலம் மாறி, இன்று அத்தனை பேரும் தலைமையை நோக்கி கல்லெறியும் அளவுக்கு கட்சித்தலைமை பலகீனப்பட்டு போய் இருக்கிறது.
புதிய ரூபம்
செங்கோட்டையன் விவகாரம் முடிந்ததா? இல்லையா? என்பது கூட இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அதற்குள் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் தற்போது எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளார்.
அவர் உலக தண்ணீர் தினமான நேற்று அதாவது மார்ச் 22ம் தேதி தண்ணீரை சேமிப்பது குறித்து ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளார். இதில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துடன் தன் படத்தையும் தனது ஆதரவாளர்கள் படத்தையும் மட்டும் சேர்த்து போட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் கூட பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் மிக, மிக கவனமாக, மிக, மிக துல்லியமாக எடப்பாடி பழனிசாமியின் படத்தை தவிர்த்துள்ளார். இந்த படத்தை சமூக வலைதளங்களில் அதிகமாக பரவவிட வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் சமூக வலைதளங்களில் இதனை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். கட்சி தலைமைக்கு இந்த விஷயம் தெரிந்தும்… தலைமை பதுங்கியிருக்கிறது. இவருக்கு எதிராக ஒரு சின்ன எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை. இவர் எதற்காக இப்படி ஒரு எதிர்ப்பை பதிவு செய்தார் என்ற விவரம் கூட பெரியதாக பேசப்படவில்லை.
இவருக்கு எதிராக கட்சித்தலைமை ஏன் இப்படி பதுங்கியிருக்கிறது என்று தான் அத்தனை பேரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவு எடப்பாடி பழனிசாமி கட்சியில் தன் கட்டுப்பாட்டை இழந்து விட்டாரா? என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு பக்கம் பாஜக இழுக்கிறது, மறுபக்கம் தி.மு.க., கிண்டலடிக்கிறது, இன்னொரு பக்கம் கட்சியின் சீனியர் தலைவர்கள் ஒருவர் மாறி, ஒருவர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
ஆனால் எதுவும் நடக்காதது போல் வடிவேலு பாணியில் எத்தனை சட்டை கிழிந்தாலும் கவலையில்லை, புது சட்டைமாற்றி, மாற்றி போடு என்று தான் எடப்பாடி பவனி வருகிறார். இதே நிலை நீடித்தால் நிச்சயம் கட்சியில் அவரது தலைமை காலியாகி விடும் அல்லது கட்சி காலியாகி விடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.