நாடு முழுவதும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (24,25 தேதிகளில்) நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி, அனைத்துப் பணியிடங்களும் பணியாளர் தேர்வில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.
இதுதொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வரும் 24ம் தேதி திங்கட்கிழமை மற்றும் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய 2 தினங்களும் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஏப்ரல் 22ம் தேதிக்குள் இந்திய வங்கிகள் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றும் சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன. ஆகையால், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்.