திண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் காரில் வந்த ஆடு திருடர்கள் மாலா என்பவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளைத் திருடி காரில் ஏற்றினர். அப்போது மாலா கூச்சலிடவே கிராம மக்கள் காரை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அந்தக் கும்பல் காரை விட்டுவிட்டு தப்பி ஓடியது. காரில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் இந்த ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கிராம மக்கள் ஒலக்கூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒலக்கூர் போலீசார், பொதுமக்கள் சிறைபிடித்த காரை சோதனையிட்டதில் அந்தக் கார் போலி பதிவு எண் கொண்டது எனத் தெரியவந்தது. இதனை அடுத்து கார் மற்றும் ஆடுகளை காவல் நிலையம் எடுத்து வந்து தப்பி ஓடிய ஆடு திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடு திருட்டு சம்பவத்தில் தப்பி ஓடியவர்களில் ஒரு பெண் மட்டும் போலீசில் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஊமங்கலம் சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி என்றும், இந்த ஆடு திருட்டில் தன்னுடன் ஈடுபட்டது காஞ்சிபுரம் லோகன் மகன் சரத்குமார் மற்றும் தாம்பரம் செல்வகுமார் மகன் வெற்றி என்றும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சரோஜினி தேவி அளித்த தகவலின் பேரில் தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.