கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முந்திரி மரக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளைக்கரை ஊராட்சி மலை அடிக்குப்பம் பெத்தான் குப்பம் கொடுக்கன் பாளையம் கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஆண்டுகளாக ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் வேளாண் பயிர் செய்து அனுபவித்து வரும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய பொதுமக்களை மிரட்டி 9,000 முந்திரி மரங்களை வேரோடு பிடுங்கி எரித்து விவசாயத்தை அழித்து நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சி செய்வதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் முந்திரி மரக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக மலையடிக்குப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விவசாய நிலங்களில் இருந்து அகற்றப்பட்ட முந்திரி மரங்கள் இருந்த இடங்களில் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுக்கும் பொருட்டு அனைவரையும் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
இந்நிலையில், மலையடிக்குப்பம் முதன்மைச் சாலையில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு சிபிஎம் ராஜேஷ் கண்ணன், சிபிஐ மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு ரமேஷ்பாபு மற்றும் ரவிச்சந்திரன், சரவணன், ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதற்கிடையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே விவசாய அமைப்பினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் அப்பகுதி விவசாய மக்களையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.