டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக இடம் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற அதிகாரிகளுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் மறைத்து வைத்திருப்பதைப் பார்த்து விட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நீதிபதி வீட்டில் பெரும் அளவுக்கு பணம் இருக்கும் விபரங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்தப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தைக் அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அவர் ஏற்கனவே பணிபுரிந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. கொலீஜியத்தில் உள்ள சில நீதிபதிகள் அவரை பதிவு விலகச் செய்யவேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது தொடர் விசாரணை நடவடிக்கைகள் பாயும் என்றும் கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கி இருக்கும் நீதிபதி யஸ்வந்த் வர்மா உத்தரபிரதேச அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டு, 2016ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து நடந்தபோது நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லியில் இல்லை. அவர் வீட்டில் இருந்த உறுப்பினர்கள் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த யஷ்வந்த் வர்மா?
கடந்த 1969 ம் ஆண்டு ஜன.,6 ல் பிரயாக்ராஜ் நகரில் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா.டில்லி பல்கலையின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், மத்திய பிரதேச மாநில ரேவா பல்கலையில் சட்டப்படிப்பு படித்தார்.
1992 ஆக., 8 ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார். 2014 ல் அதே உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2016 ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் அரசியலமைப்பு, தொழிலாளர் பிரச்னை தொழிற்சாலை நிர்வாகம் , மாநகராட்சிகள் மற்றும் வரிகள் குறித்த வழக்குகளை விசாரித்து வந்துள்ளார்.