வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன் பகுதியில் அந்தோணியார் சொரூபம் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் கல்லால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் கைகளை உடைத்தும், குழந்தையின் தலையை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் காவல் உதவி ஆய்வாளர் விஜயன் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார்.
இதுகுறித்து பங்கு தந்தை ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.