ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அப்பன்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சையத் ஷாஜகான் (வயது 74) தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும், அவர் வீட்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பைப்லைன் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
குடிநீர் குழாய் அமைத்த மறுநாளிலிருந்து குடிநீர் தனது வீட்டிற்கு வரவில்லை என்று பலமுறை ஊராட்சி செயலாளரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் முறையிட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், வயது முதிர்ந்த காலத்தில் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வந்து குடித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனக்கு குடிநீர் விநியோகம் வேண்டி இன்று தன் குடும்பத்துடன் காலி குடங்களை தோளில் மாட்டிக் கொண்டு வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வழங்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். வயது முதிர்ந்த காலத்தில் முதியவர்களை குடிநீருக்காக அலைய வைக்கும் அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.